Sunday, May 01, 2011

Festivals in Thangachimdam


திருவிழாக்கள் தமிழர்களின் வாழ்க்கை முறையில் முக்கிய பங்கு வகிப்பவை உடலையும் மனதையும் புத்துணர்வாக வைத்துகொள்வதில் திருவிழாக்களின் மகத்துவம் அலாதியானது..

திருவிழாக்கள் பொதுவாக இயற்கைக்கோ, கடவுளுக்கோ நன்றி சொல்லும் விழாவாக இருக்கிறது.



முளைக்கொட்டு உற்சவம் அல்லது முளைப்பாரி திருவிழா

ஆடி மாதங்களில் விளைச்சலுக்காக மழையே எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாய மக்கள் அம்மனிடம் வேண்டி ஒரு வாரம் காப்பு கட்டி விரதமிருந்து, முளைப்பாரி வளர்த்து நடத்தப்படும்.

முதல் நாள்: ஆடி மாதம், ஒரு ஞாயிற்று கிழமை மாலை வேளையில் அம்மனுக்கு பூஜை செய்பவருடன்  சிறுவர் சிறுமிகளும் விதைப்பு எடுக்கும்
என்னும் நிகழ்வுக்காக ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று

கடலை சிறு பயிரே..
காராமணி பயிரே

செங்கமுத்து நாச்சியாருக்கு சிறு பயிர் போடுங்க !...

நாட்டிலே விளைந்த பயிர்  நல்ல பயிர்  போடுங்க  ..

பூமியிலே விளைந்த பயிர் புது போடுங்க ..


என்று பாட்டு பாடி வீடுகளில் விளையக்கூடிய தானியங்களின் விதைகளை வாங்கி செல்வர். கொண்டு சென்ற தானியங்களை வைத்து பூஜை செய்வர்.

இரண்டாம் நாள் - செவ்வாய் கிழமை: அம்மனுக்காக மாவிலை தொரணத்துடன் காப்பு கட்டுவார்கள். வீடுகளிருந்து பெண்கள் 'பாரி பானை'
என்ற மண்பாண்டத்தில் செய்த பானையை கொண்டு சென்று கோவிலுக்கு சொந்தமான 
பொதுவான இடத்தில் கூடி, பாரி பானையில் எரு மற்றும் ஆட்டு உரங்களை பரப்பி வைத்து வீடுகளில் எடுத்த தானிய விதைகளை இட்டு நீர் பாய்ச்சி முளை பாரி உற்சவத்தை துவக்கி வைப்பார்கள். அன்றிரவே அம்மன் கரகத்தை அலங்கரித்து அம்மன் கோவிலின் முன்னுள்ள திண்ணையில் வைத்து பாட்டு பாடுவார்கள், அப்படி பாடும் பாட்டிற்கு 'அம்மா மாரி பாட்டு' என்று கூறுவார்கள். அதன் பின்பு கரகத்தை சுத்தி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 'தான கனே' கொட்டுவார்கள்.  
   
  


புனித சந்தியாராயப்பர் கோவில் திருவிழா

தங்கசிமடத்தின் பெருமை இந்த திருவிழா என்றால் அது மிகையல்ல. ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் வாரம் நடக்கும் 
இவ்வண்ண மயமான திருவிழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொள்வர்.  

வாரத்தின் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழாவில் எந்த ஒரு பாகுபாடின்றி சாதி, மதம் மொழிக்கு அப்பார்பட்டு 
மக்கள் கலந்து கொண்டு கொண்டாடுவர்.

நேர்த்தி செலுத்துதல்     

"மக்கள் கடவுள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும், கடவுள் மக்கள் மேல் வைத்திருக்கும் கருணையின்  பிரதி பலனே" இந்த நேர்த்தி செலுத்தல் வைபவம். தென்னங்கன்று  முதல் மெழுகுவர்த்தி வரை எண்ணிலடங்க பல்வேறு பொருட்களை
தங்களது நேர்த்தியில் கடவுளுக்கு செலுத்துவர். உண்மையில் இந்த நிகழ்வின் போது தூய்மையான அன்பை தவிர வேறு எதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள். 

வியாழக்கிழமை சந்தியா ராயப்பர்க்கு உகந்த நாள் , ஒவ்வொரு வியாழக்கிழமையும் கடவுளுக்கு சிறப்பு 
ஆராதனையும் விசேஷ பூஜையும் நடக்கும். 
   
மெழுகுதிரியை இறைவனுக்கு ஏற்றி
வைத்து விட்டு முழங்காலிட்டு மக்கள் மனம் உருக தன குறைகளை
அவன் முன் வைக்கும்போது பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்திவிடும்.

திருவிழாக்கோலம்  

திருவிழாவன்று தங்கச்சிமடமே புது வண்ணம் பூசபட்டிருக்கும், சிறியவர் 
முதல் பெரியவர் வரை அனைவரது முகத்தையும் புன்னகை மட்டுமே 
ஆக்கிரமித்துகொள்ளும். வித விதமான பொருட்களுடன் புது புது கடைகள்
அங்கெங்கே முளைத்திருக்கும், இரவோ பகலோ என்று அறிய முடியாத அளவுக்கு
மின் விளக்குகள் ஊரின் ஒவ்வொரு இடத்தையும் அலங்கரிக்கும்.
சாரா சரக்கும் வாகனங்கள், பரோட்டா கடைகள், பீமா புஷ்டி அல்வா, நாக கன்னி, மரண கிணறு, ரங்கராட்டினம் என்று  நேரத்தை கொள்ளை கொள்ளும் 
அத்தனை விசயங்களும் அரங்கேறி இருக்கும்.

திருவிழாவிற்காக தவமிருக்கும் மக்கள் !   

சிறு வயதினர் முதல் முதியவவர் வரை இத்திருவிழாவிற்காக அந்த வருடம் முழுவதும் தயாராவர்கள். புது உடைக்காக மட்டுமின்றி திருவிழாவில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் சேர்க்க
ஆரம்பித்து விடுவார்கள். திருவிழாவிற்கு நாட்கள் நெருங்க நெருங்க ஒவ்வொரின் மனமும் செயலும் அதை பற்றியே இருக்கும். 

மக்களின் மனக்கவலைகள் திருவிழாவில் சிறுவர்கள் ஊதி விடும் சோப்பு நுரை குமிழை போல காற்றோடு காற்றாக மறைந்து விடும்.

திருவிழா மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை முறையை, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் தான் என்பது போல திருவிழாவிற்காக
பூ விற்பது, டீ கடை, பழரச கடை, பொம்மைகள் விற்பது என ஒவ்வொரும் குறுகிய கால சுயதொழில் முதலாளியாகி இருப்பார்கள் அது மட்டுமின்றி
இத்திருவிழா அவர்களின் குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றி
வைத்திருக்கும் என்பது நிதர்சமான உண்மை.



     





Thangachimadam Naming Reason


தங்கச்சிமடம் பெயர்க்காரணம்
Thangachimadam Entrance


1819 இம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் விஜய ரகுநாத சேதுபதிக்கு வாரிசாக இரு வீர மங்கையர்கள் அவர்கள் கணவன்மார்களுடன் வாழ்ந்து வந்தனர், மன்னர் தனது மருமகன்கள் இருவரையும் சமஸ்தானத்திற்கு பாத்தியபட்ட தென்னிந்திய காசி என்ற அழைக்கப்படும் அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய திருப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தை தரிசிக்க வரும் நேபாளம் , வட மற்றும் தென் இந்திய யாத்ரிகர்ளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நியமித்து இருந்தார். ராமநாதபுரத்திலுருந்து ராமேஸ்வரம் வரை வழி நெடுகிலும் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் இலவச அன்னதான சத்திரங்கள், குளங்கள் மற்றும் மண்டபத்திலுருந்து கடலை கடந்து ராமேஸ்வரம் செல்ல தேவையான மரக்கலங்கள் அவைகளை ஓட்டி செல்ல படகோட்டிகள் போன்ற வசதிகளை அமைத்தது இருந்தார்.



இன்றும் கூட நீங்கள் கவனிக்கலாம் பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வழியெங்கும் சத்திரங்கள், குளங்கள் திராவிட கால பாரம்பரியத்துடன் அதே சமயம் சிதைந்தும் தனது உருவை இழப்பதை.. சரி மீண்டும் வரலாற்றை நோக்கி பயணிப்போம்..



இவ்வாறு மக்கள் குறிப்பறிந்து செங்கோல் ஆட்சி செய்த மன்னனுடைய புகழுக்கு களங்கம் விளைவித்த நிகழ்வுக்கு அவர்கள் மருமகன்களே காரணமாக அமைந்தது கொடுமையே ஆயினும் அவை வாழ்வின் தர்ம நெறிகளை உலகிருக்கு உரைக்க பயன்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல..

மன்னருக்கு தெரியாமல் மருமகன்கள் இருவரும், பயணிகளிடம் மரகலங்களில் செல்வதற்கு கட்டணம் வசூலித்தனர். இதை கண்டு பொறுக்காத ஏழை பயணிகள் மன்னரிடம் முறையிட்டனர், மன்னரின் இதயம் சுக்கு நூறாகியது , தமது மருமகன்களே இவ்வாறு செய்து விட்டார்களே என்று மனம் வருந்தி நேராக தனது மகள்களிடம் சென்று தவறுக்கு காரணமானவர்கள் யாரு என்று சொல்லாமல்,தவறை விளக்கி இது போன்று தெய்வ காரியங்களில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களிடமே கேட்டார், அதற்கு அந்த நீதிமான்களின் வாரிசுகளோ 'இந்த தவறு செய்தவர்களின் தலை குடி மக்கள் முன்னிலையில் கொய்ய வேண்டும்  என்றனர்'. மன்னரும் அவ்வாறே செய்ய உத்தரவிட்டார்.

தங்கள் கணவன்மார்கள் கொள்ளபட்டதை அறிந்து கதறி அவர்கள் அழுத போதும் 'நீதி அனைவருக்கும் சமம்' என்றதில் தம் மனதை தேற்றி கொண்டனர் எனினும் சில நாட்களுக்கு பிறகு தங்களின் அன்பான கணவன்மார்களின் பிரிவு தாங்காது தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

சகோதரிகளில் மூத்தவள் ஒரு குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள், இளையவள் சிறிது தூரம் சென்று அங்கே உள்ள குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள்.. பத்தினிகளின் இந்த முடிவை கண்டு மக்கள் அவர்களை தெய்வமாக வணங்கினர். அவர்களின் நினைவாக மூத்தவள் இறந்த இடத்திற்கு அக்காள்மடம் என்றும் இளையவள் இறந்த இடத்தை தங்கச்சிமடம் என்றும் பெயரிட்டு வணங்கினர், இது மற்றுமின்றி இருவருக்கும் அந்ததந்த ஊர்களில் கோயில் எழுப்பி கும்பிட்டனர். இன்றும் கூட தங்கச்சி அம்மன் கோவிலை தங்கச்சிமடம் முருகன் கோவில் தெற்கு புற வாயிலில் காணலாம்.


ஆதாரம் : "சேதுபதிகளின் வாழ்க்கை மற்றும் ஆட்சி முறை" பற்றி கலைஞர் டிவியில்    பூத கண்ணாடி  என்ற நிகழ்ச்சியில் சொல்லபட்ட சிறு செய்திகுறிப்பு. அதை நான் கொஞ்சம் விவரித்து எழுதியுள்ளேன்.


இப்ப உங்க ஊரு என்னனு கேட்டால் தங்கச்சிமடம்னு சும்மா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லாம்லே..

ஊர் பாசத்துடன்,
பாலா

இந்த பதிர்விக்கான உங்களது கருத்துகளை  balab4u@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்க..