தங்கச்சிமடம் பெயர்க்காரணம்
Thangachimadam Entrance |
1819 இம் ஆண்டு ராமநாதபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் விஜய ரகுநாத சேதுபதிக்கு வாரிசாக இரு வீர மங்கையர்கள் அவர்கள் கணவன்மார்களுடன் வாழ்ந்து வந்தனர், மன்னர் தனது மருமகன்கள் இருவரையும் சமஸ்தானத்திற்கு பாத்தியபட்ட தென்னிந்திய காசி என்ற அழைக்கப்படும் அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலய திருப்பணிகளுக்கும் மற்றும் ஆலயத்தை தரிசிக்க வரும் நேபாளம் , வட மற்றும் தென் இந்திய யாத்ரிகர்ளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நியமித்து இருந்தார். ராமநாதபுரத்திலுருந்து ராமேஸ்வரம் வரை வழி நெடுகிலும் பயணிகள் தங்கவும் இளைப்பாறவும் இலவச அன்னதான சத்திரங்கள், குளங்கள் மற்றும் மண்டபத்திலுருந்து கடலை கடந்து ராமேஸ்வரம் செல்ல தேவையான மரக்கலங்கள் அவைகளை ஓட்டி செல்ல படகோட்டிகள் போன்ற வசதிகளை அமைத்தது இருந்தார்.
இன்றும் கூட நீங்கள் கவனிக்கலாம் பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் வழியெங்கும் சத்திரங்கள், குளங்கள் திராவிட கால பாரம்பரியத்துடன் அதே சமயம் சிதைந்தும் தனது உருவை இழப்பதை.. சரி மீண்டும் வரலாற்றை நோக்கி பயணிப்போம்..
இவ்வாறு மக்கள் குறிப்பறிந்து செங்கோல் ஆட்சி செய்த மன்னனுடைய புகழுக்கு களங்கம் விளைவித்த நிகழ்வுக்கு அவர்கள் மருமகன்களே காரணமாக அமைந்தது கொடுமையே ஆயினும் அவை வாழ்வின் தர்ம நெறிகளை உலகிருக்கு உரைக்க பயன்பட்டன என்று சொன்னால் அது மிகையல்ல..
மன்னருக்கு தெரியாமல் மருமகன்கள் இருவரும், பயணிகளிடம் மரகலங்களில் செல்வதற்கு கட்டணம் வசூலித்தனர். இதை கண்டு பொறுக்காத ஏழை பயணிகள் மன்னரிடம் முறையிட்டனர், மன்னரின் இதயம் சுக்கு நூறாகியது , தமது மருமகன்களே இவ்வாறு செய்து விட்டார்களே என்று மனம் வருந்தி நேராக தனது மகள்களிடம் சென்று தவறுக்கு காரணமானவர்கள் யாரு என்று சொல்லாமல்,தவறை விளக்கி இது போன்று தெய்வ காரியங்களில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று அவர்களிடமே கேட்டார், அதற்கு அந்த நீதிமான்களின் வாரிசுகளோ 'இந்த தவறு செய்தவர்களின் தலை குடி மக்கள் முன்னிலையில் கொய்ய வேண்டும் என்றனர்'. மன்னரும் அவ்வாறே செய்ய உத்தரவிட்டார்.
தங்கள் கணவன்மார்கள் கொள்ளபட்டதை அறிந்து கதறி அவர்கள் அழுத போதும் 'நீதி அனைவருக்கும் சமம்' என்றதில் தம் மனதை தேற்றி கொண்டனர் எனினும் சில நாட்களுக்கு பிறகு தங்களின் அன்பான கணவன்மார்களின் பிரிவு தாங்காது தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
சகோதரிகளில் மூத்தவள் ஒரு குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள், இளையவள் சிறிது தூரம் சென்று அங்கே உள்ள குளத்தில் விழுந்து உயிர் துறந்தாள்.. பத்தினிகளின் இந்த முடிவை கண்டு மக்கள் அவர்களை தெய்வமாக வணங்கினர். அவர்களின் நினைவாக மூத்தவள் இறந்த இடத்திற்கு அக்காள்மடம் என்றும் இளையவள் இறந்த இடத்தை தங்கச்சிமடம் என்றும் பெயரிட்டு வணங்கினர், இது மற்றுமின்றி இருவருக்கும் அந்ததந்த ஊர்களில் கோயில் எழுப்பி கும்பிட்டனர். இன்றும் கூட தங்கச்சி அம்மன் கோவிலை தங்கச்சிமடம் முருகன் கோவில் தெற்கு புற வாயிலில் காணலாம்.
ஆதாரம் : "சேதுபதிகளின் வாழ்க்கை மற்றும் ஆட்சி முறை" பற்றி கலைஞர் டிவியில் பூத கண்ணாடி என்ற நிகழ்ச்சியில் சொல்லபட்ட சிறு செய்திகுறிப்பு. அதை நான் கொஞ்சம் விவரித்து எழுதியுள்ளேன்.
இப்ப உங்க ஊரு என்னனு கேட்டால் தங்கச்சிமடம்னு சும்மா நெஞ்சை நிமித்தி பெருமையா சொல்லாம்லே..
ஊர் பாசத்துடன்,
No comments:
Post a Comment