Saturday, October 05, 2013

தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

மீனவநண்பன் - தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

ஆபத்து காலங்களில் பயன்படும் வகையிலான நவீன ரக கைபேசிகளை (Mobile Phones) மீன்வளத்துறை மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இதற்க்கு 'மீனவ நண்பன்' என பெயரிடப் பட்டுள்ளது.

 இந்த கைப்பேசிகள் முதன் முறையாக தமிழகத்தில் தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சோதனை முயற்சியாக பத்து பேருக்கு மட்டும் தற்போது நவீன கைப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிறகு அனைத்து மீனவர்களுக்கும் மானிய விலையில் இந்த கைப்பேசிகள் வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலில் ஆபத்து நேரிடும் போது சக மீனவர்களை உதவிக்கு அழைக்கும் வகையிலும், பருவநிலை மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் நவீன கைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு நலத்திட்டங்கள், கடலில் ஆபத்தான பகுதிகள் உள்ளிட்ட விபரங்களும் இந்த கைபேசியில் இடம்பெற்றுள்ளது.

Thangachimadam Fishermen Friend Mobile
கைப்பேசி வழங்கும் விழா         
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கடைகோடியில் இருக்கும் ஏழை மக்களுக்கும் அறிவு சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொழில்நுட்பங்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் கிராம வள மையம் மற்றும் கிராம அறிவு மையங்கள் என்ற திட்டம். முதன் முதலில் புதுச்சேரியில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் மாறிவரும் இன்றைய கால சூழலுக்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப பரிமாணங்களை பெற்று சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளூர் மக்களின் தேவைகளைப் கண்டறிந்து தகவல் தொழில்நுட்பங்கள் வாயிலாக அவற்றை உரிய மக்களிடத்தில் சரியான நேரத்தில் கொண்டுப்போய் சேர்ப்பதே இந்தத்திட்டத்தின் சிறப்பம்சம். 2004-ல் முதல் இத்திட்டம் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, கேரளா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு இதன் மூலம் வேளாண்மை, மீன்வளம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைச்சார்ந்த தகவல்களை உள்ளூர் மொழிகளில் அந்தந்த கிராம மக்களுக்கு ஏற்ற வகையில் அளித்து வருகின்றது.

2007 ஆண்டு முதல் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதார பிரச்சனையைத் தீர்க்கவும், விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியைக் குறைக்கவும் கைப்பேசி தொழில்நுட்பத்தை ஒரு பாலமாக ஏற்று தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. இந்த புதிய கைப்பேசி தொழில்நுட்பங்கள் மூலம் மீன் பிடித் தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை அச்சமுதாயத்தினருக்குப் பயன் அளித்திட முடிவு செய்து, தனது சேவையை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலில் பாரம்பரிய அறிவும், புலமையும் இருந்த போதிலும் அத்தொழிலில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து லாபத்தைப் பெருக்கிட புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அத்தொழில்நுட்பங்களை சாதாரண மீனவர்கள் அறிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்துவதும் பெரும் சவாலாக விளங்குகிறது. இச்சவால்களை மேலும் சிக்கலாக்கும் வண்ணம் சுனாமி (ஆழிப்பேரலை) போன்ற இயற்கைச் சீற்றங்களும் வழிகோல்கிறது. இத்தகைய சூழல்களை மேற்கொள்ளும் மீனவ நண்பர்கள் மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இந்த இந்த மீனவ நண்பன் கைப்பேசித் திட்டம்.

'மீனவ நண்பன்' கைப்பேசி திட்டம் ஒரு பார்வை

மீனவ நண்பன் கைப்பேசி என்பது ஒரு செயலி. இது ஆன்டிராய்டு தளம் உள்ள கைப்பேசியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும். இந்த கைப்பேசியின் மூலம் மீனவ சமூகத்தினர் கீழ்கண்ட தகவல்களை பெறலாம்

ஃ அதிக மீன்கள் கிடைக்க சாதகமான மண்டலங்கள்,
ஃ கடல் அலை உயரம், காற்றின் வேகம், பேரலை முன்னெச்சரிக்கை போன்ற கடல் நிலைத் தகவல்கள்,
ஃ வானிலை முன்னறிவிப்பு,
ஃ புவியில் உள்ள இடங்களை அறிந்துகொள்ள உதவும் கருவி (GPS) மூலம் கரையிலிருந்து கடலுக்கும் மீண்டும் பாதுகாப்பாகக் கரையை வந்தடையவும் கடல்வழிப் பாதையை மீனவர்களுக்கு அளித்தல்,
ஃ கடல் சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்,
ஃ இடம் காட்டும் கருவி மூலம் பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்,
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்,
ஃ மீனவ சமுதாயத்தினருக்கு அரசுத் திட்டங்கள், செய்திகள், கொள்கைகள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கொடுத்து அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துதல்

நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள்

ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமுதாயத்தினரின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப தனது தகவல் தொழில்நுட்பத் தளத்தினில் உள்ள விஞ்ஞானத் தகவல்களை அவ்வப்பொழுது புதுப்பித்துக் கொள்கின்றது. இத்தகைய தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தனியார் மற்றும் அரசுத்துறைகளுடன் உள்ள உறுதியான பங்கேற்பினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உதாரணமாக, தேசிய கடல்நிலை தகவல்கள் ஆய்வு மையம், ஐதராபாத், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு மீன் வளத்துறை, மீன் வள பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்தியக் கடலோர காவல்படை ஆகியன இத்தகவல்களை வழங்குகின்றன.

மீனவ நண்பன் தனித்துவம் மற்றும் பங்கேற்பு

குறைந்த விலையில் அதிவேகமாக வளர்ந்துள்ள கைப்பேசியின் வாயிலாக ஜூலை 2006-ஆம் ஆண்டு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், குவால்காமும் (Qualcomm) இணைந்து மீனவ சமுதாயத்துக்கு கைப்பேசியின் மூலம் எவ்வாறு தகவல்களை அனுப்பலாம் என்பது குறித்த கருத்தரங்கை துவங்கியது.

கருத்தரங்கின் தொடர்ச்சியாக ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம், டாடா தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அஸ்டியூட் தனியார் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தளத்தின் வாயிலாக மீனவ நண்பன் கைப்பேசி முதல் வடிவம் உருவாக்கப்பட்டது. அது முழுவதும் சிடிஎம்ஏ என்று சொல்லக்கூடிய மொபைல் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த கைப்பேசியின் மூலம் மீனவர்கள் கடல்நிலைத் தகவல்கள், மீன்கள் அதிகமாக கிடைக்கக்கூடிய மண்டலங்கள், சந்தை நிலவரம் மற்றும் அரசு நலத் திட்டங்கள் போன்றவை அறிவுச் சார்ந்த விஷயங்கள் மீனவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் மாறிவரும் மீனவர்களுடைய தேவைகள் மற்றும் கால வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீனவ நண்பன் கைபேசி புதிய வடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கில் செயல்படும் ஆன்டிராய்டு தளத்தில் கூடுதல் சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அக்கூடுதல் அம்சங்களாவன:

ஃ குறிப்பிட்ட மீன் இனங்களுக்கான தகவல்கள் மற்றும் சந்தை நிலவரங்கள்,
ஃ சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்.
ஃ இடம் காட்டும் கருவி மூலம், பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்.
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்.
ஃ முன்கூட்டியே வானிலை தகவல்களைத் தருவதன் மூலம் பேரலைகளில் சிக்காமல் உயிர் காக்க உதவுகின்றது.

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம் மற்றும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனங்கள் இணைந்து இந்த மீனவ நண்பன் இரண்டாம் பாகம் திட்டத்தை உருவாக்கியுள்ளன. குவால்காம் இத்தகைய புதிய முயற்சிக்கு நிதி உதவியையும், டி.சி.எஸ். செயலியையும் உருவாக்கியுள்ளது. ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயலி வடிவமைப்பு, அனைத்து தகவல்கள், முதல்கட்ட பரிசோதனை மற்றும் மீனவ சமுதாயத்துக்கு உகந்த மிக முக்கியமான தகவல்களை தளமேற்றுதல் போன்றவை செய்து வருகின்றது.

இத்திட்டத்தின் தனித்துவம் என்னவென்றால் இச்செயலியை வடிவமைத்தலில் இருந்து அதனை நடைமுறைப்படுத்திவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மீனவர்களைக் ஈடுபடுத்தி அவர்களை பங்கேற்க செய்து அவர்களுடை கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைப்பு செய்ததேயாகும். இத்தொழில்நுட்ப தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில் இதன் நெகிழ்வுத் தன்மை மற்றும் எளிமையை பயன்படுத்தி இச்செயலியைப் பயன்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மீனவ சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை அளிக்க தேவைப்படும் மாற்றங்களைச் செய்யவும் முடியும்.

No comments: