Friday, October 18, 2013

சாப்பாட்டுப் புராணம்



ஒரு நாட்டுடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்பீடுகளில் தலையாயது 'அந்த மண்ணில்  தயாராகும் உணவு வகைகள் என்றால் அது மிகையல்ல.

ஒவ்வொரு வகை உணவுகளும்பல தலைமுறைகளின் பரிமாணங்களை, மக்களின் பழக்க வழக்கங்களை, வாழ்க்கை முறைகளை, விருந்தோம்பல் கூறுகளை உள்ளடக்கிருக்கும்.

ஆம்பூரில்  அரேபியர்களின் விருப்ப உணவான ‘தம் பிரியாணி’ இடம் பிடிச்சது எப்படி? ஸ்ரீவில்லிபுத்துர்லே ‘பஞ்சாபி  பால்கோவா’ எப்படி சாத்தியமாச்சு? ‘மணப்பாறை முறுக்குக்கு’ மட்டும் எப்படி அப்படியொரு சுவை வந்துச்சு? இப்படியாக நீங்கள் ஒவ்வொரு உணவின் வேர்களை தேடி சென்றால்.. அவைகள்  அந்த ஊர் மக்களின் வரலாற்றை தன்னகத்தே மறைத்து வைத்திருக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு வகைகளை நீங்கள் உலகளவில் பட்டியலிட முயன்றால் தமிழ்நாடு மற்றும் உலகத்தின் பிற பகுதிகள் ன்னு இரு வேறாக பிரிக்க வேண்டியிருக்கும். அத்தனை விதமான உணவு வகைகள், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கிறது.

தமிழ் மொழி எவ்வளவு செழுமையானதோ அதற்கு சற்றும் சளைத்தவனவல்ல 'தமிழ்நாட்டு உணவு வகைகள்'. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

மத்த ஊரை பாக்குறதுக்கு முன்னாடி நம்ம ஊருலே இருந்த, இருக்குற சிறப்பான உணவு வகைகளை பார்ப்போமா?

சிறப்பான உணவு வகைகள் - தங்கச்சிமடம்

1. செட்டி கடை பரோட்டா (முருகன் கோவில் ஸ்டாப்)- நினைச்சாலே நாக்குலே எச்சி லிட்டர் கணக்கா ஊருமே.
2. முனியாண்டி கடை டீ (முதல் ஸ்டாப்)- அவரோடே டீ ஒரு 'சுவை' ன்னா, அவரு டீ போடுறே அழகே தனி 'ஸ்டைலு' தாங்க.
3. சீதாபதி கடை சுண்டல் மற்றும் வடை ( முருகன் கோவில் ஸ்டாப் அருகே அமைந்திருந்தது , இப்பொழுது வடக்கு தெரு போகும் வழியில்)
4. ராஜேந்திரன் கடை குஷ்கா (சமையன் கோவில் போகும் வழியில்)
5. பெருமாள் டீக் கடை வெங்காய போண்டா (முருகன் கோவில் ஸ்டாப்)

இதைத் தவிர, வெளியூரிலுருந்து வந்து நம்மை சிறப்பித்தவர்கள்.

1. தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்..ல்ல்ல்
2. அல்வா ரொதல்..ல்ல்ல்ல்..
3. பயறு பயறு..றுறுறு
4. ஐஸ்.. குச்சி ஐஸ் ..பால் ஐஸ்
5. சிங்கி... சிங்கி ன்னு அடிக்கிற பொம்மையோடு வரும் ஜவ்வு மிட்டாய்

இப்போ மத்த ஊர்களை பார்க்கலாமா?...

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு

    1.   சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

    2.    நடுக்கடை  : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

    3.    சிதம்பரம் கொத்சு

    4.    புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

    5.    திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

    6.    கும்பகோணம் பூரி-பாஸந்தி

    7.    ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

    8.    மன்னார்குடி அல்வா

    9.    கூத்தாநல்லூர் தம்ரூட்

    10.  நீடாமங்கலம் பால்திரட்டு

    11.  திருவையாறு அசோகா

    12.  கும்பகோணம் டிகிரி காபி

    13.  விருதுநகர் பொரிச்ச பரோட்டா

    14.  கோவில்பட்டி கடலை மிட்டாய்

    15.  ஆம்பூர் தம் பிரியாணி

    16.  நாகர்கோவில் அடை அவியல்

    17.  சாத்தூர் சீவல்

    18.  திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

    19.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

    20.  செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்

    21.  மணப்பாறை அரிசி முறுக்கு

    22.  கீழக்கரை ரொதல்அல்வா

    23.  திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

    24.  பண்ருட்டி முந்திரி சாம்பார்

    25.  மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

    26.  சாயல்குடி கருப்பட்டி காபி

    27.  பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா 

    28.  பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

    29.  கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

    30.  புதுக்கோட்டை முட்டை மாஸ்

    31.  தூத்துக்குடி மக்ரூன்

    32.  கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

    33.  ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

    34.  ஈழத் தமிழர்கள் சொதி மற்றும் தேங்காய்ப்  பால்

    35.  செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

    1. குழிப்பணியாரம்

    2. வாழைப்பழ தோசை

    3. எண்ணெய் கத்தரிக்காய்

    4. பால் பணியாரம்

    5. பூண்டு வெங்காய குழம்பு

    6. ரவா பணியாரம்

    7. பால் கொழுக்கட்டை

    8. சேமியா கேசரி

    9. மோர் குழம்பு

    10. நாட்டுகோழி மிளகு வறுவல்

    11. இறால் தொக்கு

    12. நட்டுக் கோழி ரசம்

    13. நண்டு மசாலா

    14. வெண்டைக்காய் புளிக்கறி

    15. பருப்பு சூப்

    16. ரிப்பன் பக்கோடா

    17. பருப்பு உருண்டை குழம்பு

    18. குருமா குழம்பு

    19. தேன்குழல்

    20. கருப்பட்டி பணியாரம்

    21. சீயம்

    22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும்   வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

  குறிப்பு: எழுத்தாளர் சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணமே இந்த கட்டுரைக்கான உந்துதல்.

 

Saturday, October 05, 2013

தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

மீனவநண்பன் - தங்கச்சிமடம் மீனவர்களுக்கு நவீன கைபேசி

ஆபத்து காலங்களில் பயன்படும் வகையிலான நவீன ரக கைபேசிகளை (Mobile Phones) மீன்வளத்துறை மற்றும் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. இதற்க்கு 'மீனவ நண்பன்' என பெயரிடப் பட்டுள்ளது.

 இந்த கைப்பேசிகள் முதன் முறையாக தமிழகத்தில் தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சோதனை முயற்சியாக பத்து பேருக்கு மட்டும் தற்போது நவீன கைப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிறகு அனைத்து மீனவர்களுக்கும் மானிய விலையில் இந்த கைப்பேசிகள் வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலில் ஆபத்து நேரிடும் போது சக மீனவர்களை உதவிக்கு அழைக்கும் வகையிலும், பருவநிலை மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் நவீன கைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசு நலத்திட்டங்கள், கடலில் ஆபத்தான பகுதிகள் உள்ளிட்ட விபரங்களும் இந்த கைபேசியில் இடம்பெற்றுள்ளது.

Thangachimadam Fishermen Friend Mobile
கைப்பேசி வழங்கும் விழா         
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கடைகோடியில் இருக்கும் ஏழை மக்களுக்கும் அறிவு சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொழில்நுட்பங்கள் உதவியுடன் செயல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிக முக்கியமான திட்டம் கிராம வள மையம் மற்றும் கிராம அறிவு மையங்கள் என்ற திட்டம். முதன் முதலில் புதுச்சேரியில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத்திட்டம் மாறிவரும் இன்றைய கால சூழலுக்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப பரிமாணங்களை பெற்று சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உள்ளூர் மக்களின் தேவைகளைப் கண்டறிந்து தகவல் தொழில்நுட்பங்கள் வாயிலாக அவற்றை உரிய மக்களிடத்தில் சரியான நேரத்தில் கொண்டுப்போய் சேர்ப்பதே இந்தத்திட்டத்தின் சிறப்பம்சம். 2004-ல் முதல் இத்திட்டம் தமிழகம், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, கேரளா மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு இதன் மூலம் வேளாண்மை, மீன்வளம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைச்சார்ந்த தகவல்களை உள்ளூர் மொழிகளில் அந்தந்த கிராம மக்களுக்கு ஏற்ற வகையில் அளித்து வருகின்றது.

2007 ஆண்டு முதல் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமூகத்தினரின் வாழ்வாதார பிரச்சனையைத் தீர்க்கவும், விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியைக் குறைக்கவும் கைப்பேசி தொழில்நுட்பத்தை ஒரு பாலமாக ஏற்று தொடர்ந்து செயலாற்றி வருகின்றது. இந்த புதிய கைப்பேசி தொழில்நுட்பங்கள் மூலம் மீன் பிடித் தொழில் சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களை அச்சமுதாயத்தினருக்குப் பயன் அளித்திட முடிவு செய்து, தனது சேவையை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலில் பாரம்பரிய அறிவும், புலமையும் இருந்த போதிலும் அத்தொழிலில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து லாபத்தைப் பெருக்கிட புதிய தொழில் நுட்பங்கள் தேவைப்படுகின்றன. அத்தொழில்நுட்பங்களை சாதாரண மீனவர்கள் அறிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்துவதும் பெரும் சவாலாக விளங்குகிறது. இச்சவால்களை மேலும் சிக்கலாக்கும் வண்ணம் சுனாமி (ஆழிப்பேரலை) போன்ற இயற்கைச் சீற்றங்களும் வழிகோல்கிறது. இத்தகைய சூழல்களை மேற்கொள்ளும் மீனவ நண்பர்கள் மேற்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சியே இந்த இந்த மீனவ நண்பன் கைப்பேசித் திட்டம்.

'மீனவ நண்பன்' கைப்பேசி திட்டம் ஒரு பார்வை

மீனவ நண்பன் கைப்பேசி என்பது ஒரு செயலி. இது ஆன்டிராய்டு தளம் உள்ள கைப்பேசியில் தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும். இந்த கைப்பேசியின் மூலம் மீனவ சமூகத்தினர் கீழ்கண்ட தகவல்களை பெறலாம்

ஃ அதிக மீன்கள் கிடைக்க சாதகமான மண்டலங்கள்,
ஃ கடல் அலை உயரம், காற்றின் வேகம், பேரலை முன்னெச்சரிக்கை போன்ற கடல் நிலைத் தகவல்கள்,
ஃ வானிலை முன்னறிவிப்பு,
ஃ புவியில் உள்ள இடங்களை அறிந்துகொள்ள உதவும் கருவி (GPS) மூலம் கரையிலிருந்து கடலுக்கும் மீண்டும் பாதுகாப்பாகக் கரையை வந்தடையவும் கடல்வழிப் பாதையை மீனவர்களுக்கு அளித்தல்,
ஃ கடல் சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்,
ஃ இடம் காட்டும் கருவி மூலம் பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்,
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்,
ஃ மீனவ சமுதாயத்தினருக்கு அரசுத் திட்டங்கள், செய்திகள், கொள்கைகள் மற்றும் புதிய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கொடுத்து அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துதல்

நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள்

ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மீனவ சமுதாயத்தினரின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப தனது தகவல் தொழில்நுட்பத் தளத்தினில் உள்ள விஞ்ஞானத் தகவல்களை அவ்வப்பொழுது புதுப்பித்துக் கொள்கின்றது. இத்தகைய தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தனியார் மற்றும் அரசுத்துறைகளுடன் உள்ள உறுதியான பங்கேற்பினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உதாரணமாக, தேசிய கடல்நிலை தகவல்கள் ஆய்வு மையம், ஐதராபாத், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு மீன் வளத்துறை, மீன் வள பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்தியக் கடலோர காவல்படை ஆகியன இத்தகவல்களை வழங்குகின்றன.

மீனவ நண்பன் தனித்துவம் மற்றும் பங்கேற்பு

குறைந்த விலையில் அதிவேகமாக வளர்ந்துள்ள கைப்பேசியின் வாயிலாக ஜூலை 2006-ஆம் ஆண்டு ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும், குவால்காமும் (Qualcomm) இணைந்து மீனவ சமுதாயத்துக்கு கைப்பேசியின் மூலம் எவ்வாறு தகவல்களை அனுப்பலாம் என்பது குறித்த கருத்தரங்கை துவங்கியது.

கருத்தரங்கின் தொடர்ச்சியாக ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம், டாடா தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் அஸ்டியூட் தனியார் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தளத்தின் வாயிலாக மீனவ நண்பன் கைப்பேசி முதல் வடிவம் உருவாக்கப்பட்டது. அது முழுவதும் சிடிஎம்ஏ என்று சொல்லக்கூடிய மொபைல் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இந்த கைப்பேசியின் மூலம் மீனவர்கள் கடல்நிலைத் தகவல்கள், மீன்கள் அதிகமாக கிடைக்கக்கூடிய மண்டலங்கள், சந்தை நிலவரம் மற்றும் அரசு நலத் திட்டங்கள் போன்றவை அறிவுச் சார்ந்த விஷயங்கள் மீனவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால் மாறிவரும் மீனவர்களுடைய தேவைகள் மற்றும் கால வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீனவ நண்பன் கைபேசி புதிய வடிவம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கில் செயல்படும் ஆன்டிராய்டு தளத்தில் கூடுதல் சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அக்கூடுதல் அம்சங்களாவன:

ஃ குறிப்பிட்ட மீன் இனங்களுக்கான தகவல்கள் மற்றும் சந்தை நிலவரங்கள்,
ஃ சர்வதேச எல்லையை நெருங்குவதையும், அடைவதையும் சுட்டிக்காட்டுதல்.
ஃ இடம் காட்டும் கருவி மூலம், பாறைகள், மூழ்கிய கப்பல் மற்றும் அழிந்துபோன பவளப்பாறைகள் போன்ற ஆபத்தான பகுதிகளைக் கண்டறிய மீனவர்களுக்கு உதவுதல்.
ஃ அவசர சூழல்களில் முக்கியமான நபர்களை, மீனவ அவசர உதவி எண் ஆகியவைகளை எளிதாக அணுக உதவுதல்.
ஃ முன்கூட்டியே வானிலை தகவல்களைத் தருவதன் மூலம் பேரலைகளில் சிக்காமல் உயிர் காக்க உதவுகின்றது.

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், குவால்காம் மற்றும் டாடா கன்சல்டன்ஸி நிறுவனங்கள் இணைந்து இந்த மீனவ நண்பன் இரண்டாம் பாகம் திட்டத்தை உருவாக்கியுள்ளன. குவால்காம் இத்தகைய புதிய முயற்சிக்கு நிதி உதவியையும், டி.சி.எஸ். செயலியையும் உருவாக்கியுள்ளது. ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயலி வடிவமைப்பு, அனைத்து தகவல்கள், முதல்கட்ட பரிசோதனை மற்றும் மீனவ சமுதாயத்துக்கு உகந்த மிக முக்கியமான தகவல்களை தளமேற்றுதல் போன்றவை செய்து வருகின்றது.

இத்திட்டத்தின் தனித்துவம் என்னவென்றால் இச்செயலியை வடிவமைத்தலில் இருந்து அதனை நடைமுறைப்படுத்திவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மீனவர்களைக் ஈடுபடுத்தி அவர்களை பங்கேற்க செய்து அவர்களுடை கருத்துக்களின் அடிப்படையில் வடிவமைப்பு செய்ததேயாகும். இத்தொழில்நுட்ப தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் யாதெனில் இதன் நெகிழ்வுத் தன்மை மற்றும் எளிமையை பயன்படுத்தி இச்செயலியைப் பயன்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மீனவ சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை அளிக்க தேவைப்படும் மாற்றங்களைச் செய்யவும் முடியும்.