Thursday, December 19, 2013

A History of Paravars

Fisher men in Thangachimadam












தங்கச்சிமடத்தில் மிகப் பெரும்பான்மையாக வசிக்கும் பரவர் இன மக்களின் வாழ்க்கை முறைகளையும் மற்றும்  இனத்தின் ஆதி வேர்களையும் தேடிச் செல்லும் ஒரு பயணம்.

பரவர் இனத்தின் வரலாறு பற்றி ஜெயமோகன்

இன்றைய காலகட்டத்தில் இந்த மிஷனரி வரலாறுக்கு எதிராக ஆணித்தரமான வரலாறுகள் உருவாகிவரவேண்டிய கட்டாயம் உள்ளது. தங்களால் மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பாரம்பரியமோ வரலாறோ இல்லை, அவர்கள் அதற்கு முன்னர் கீழ்த்தரமான பழங்குடிகளாக இருந்தார்கள் என்று காட்டுவது மிஷனரி வழக்கம். இன்றும் அம்மனநிலை நீடிக்கிறது.

உதாரணமாக மதம் மாறிய கிறித்தவ பரதவர்கள் குறித்தும் இதே கதைதான் உள்ளது. அதை அம்மக்களும் நம்புகிறார்கள்.
ஆனால் பரதவர்களில் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நிலப்பகுதி அவர்களாலேயே ஆளப்பட்டது. பாண்டிய வம்சமேகூட ஒரு பரதவ வம்சத்தின் நீட்சியே. ஏன் மிகச்சமீபகாலத்திலேயே  பதினேழாம் நூற்றாண்டின் செண்பகராமன் பள்ளு போன்ற நூல்கள் பரதவ மன்னர்களைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளன. மார்த்தாண்டவர்மாவே பரதவ ஆட்சியாளர்களை அங்கீகரித்து தம்பி பட்டம் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

பரதவர் மதம் மாறியது இஸ்லாமியர் படையெடுப்புகளில் இருந்து போர்ச்சுக்கல் கப்பித்தான் பாதுகாப்பு கோரந்த்தானே ஒழிய சாதி இழிவினால் அல்ல என்பது தெளிவாகவே பதிவாகி கைக்கு கிடைக்கும் வரலாறு.

விக்கி பீடியா குழுவினரின் அங்கரிக்கப் பட்ட கட்டுரை:

பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.

இலக்கியத்தில் பரதவர்

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.
பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாக பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பழம் குலப் பெயர்கள்

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், ஆரிய நாட்டார் (ஆரியன்), கங்கை நாட்டார், சிந்து நாட்டார் சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு. இதில் ஒரு பெயரான ஆரியன் என்ற பெயர் சோழநாட்டு பட்டினவரைக் குறிக்கும் பெயராகும். இது இன்றும் வழக்கில் உண்டு. துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். அதில் சோழநாட்டுத் துறைமுகங்களில் வாழ்ந்த பட்டினவர் ஆரியன் என்று அழைக்கப்பட்டார்கள். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் தொழில்களாக கடல் ஓடுதல், கடல் வாணிபம் செய்தல், கடற்படை வீரர்களாக அரசபடைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

சிறப்புக்கள்

பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மஸ்கார்னாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.

தியாகி பெஞ்சமின்

குலசேகரபட்டினம் உப்பளத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்து, அவர்களிடமிருந்த துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றது. இந்தக்குழுவைக் துப்பாக்கியின் பின்புறத்தினால் தாக்கிய டபிள்யூ. லோன் (W. Loane) துரை என்ற ஆங்கிலேய அதிகாரியை அந்தக் குழு கொலை செய்தது. இந்தக் குற்றத்திற்காக இந்தக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக்குழுவினருள் மூன்றாமவர் பரதர் குலத்தைச் சேர்ந்த தியாகி பெஞ்சமின். இந்தக் குழுவினருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற வழக்குகளில் கடைசியாக ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நாடு விடுதலையடைந்ததை அடுத்து இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கொற்கை

2013 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தேடுக்கப்பட்ட கொற்கை நாவல் பரதவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாக ஆவணப் படுத்துகிறது. இதை எழுதியவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மேலும் இவர் மீனவ இனத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளரைப் பற்றி:
தூத்துக்குடி மாவட்டம் உவரி கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜோ டி குரூஸ் கொற்கை என்ற புதினத்தையும் ஆழி சூழ் உலகு என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது இரு புதினங்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மேலும் 2013ல் வெளியான மரியான் திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

மீன் பிடித் தொழிலை குலத் தொழிலாக கொண்டுள்ள பரதவ இன மக்களைப் பற்றி எழுத இனப் பாசம் தவிர வேறு எதுவும் கரணங்கள் உள்ளதா? விளக்கமளிக்கிறார் எழுத்தாளர்.

மீனவர்களைப் பற்றி எழுத எது உந்துகோலாக இருந்தது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது.

முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன்.

கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன்.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். பச்சை மீனை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் ‘விடியாத பொழுதுகள்’ என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

No comments: