Thursday, August 14, 2014

எங்க ஊரு டவுன் பஸ்




பாம்பன் டு வேர்க்கோடு


மினி பஸ்ஸை விட கொஞ்சம் பெருசா, பஸ்ஸை விட கொஞ்சம் சின்னதா கொஞ்சம் இருக்கைகளை மட்டும் உள் வைத்து சுற்றிலும் தகரத்தினால் வேயப்பட்டு, முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் உருவான பேருந்து பாரம்பரியமான பஸ் எங்க டவுன் பஸ்.

ராமேஸ்வரம் தீவிற்கு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு சாலை தொடர்பு இல்லாத நிலையில், தீவு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சுமார் 40 வருடங்களுக்கு முன்பாக கூட்ஸ் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது நம்ம ஊரு டவுன் பஸ்.

அது வரை மாட்டு வண்டிகளிலோ, சைக்கிளிலோ அல்லது நடந்தே தூரங்களை கடந்த நமது தீவு மக்களுக்கு இந்த டவுன் பஸ் ஒரு வரப் பிரசாதமாக அமைந்து என்றால் அது மிகையல்ல.

முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாம்பன் டு வேர்க்கோடு (4ம் நம்பர்) தடமானது தீவின் பெரும்பகுதி மக்களை இணைத்தது. பின்பு கோவில் டு தனுஸ்கோடி (3ம் நம்பர்), வேர்க்கோடு டு குந்துகால், கோவில் டு பேருந்து நிலையம் என்று புதிய தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.



கோவில் டு தனுஸ்கோடி 


டவுன் பஸ் அறிமுகமான புதிதில் மணிக்கொரு முறை மட்டுமே விடப்பட்டது. தங்கச்சிமட மக்கள் பேருந்து வரும் காலத்தை வைத்தே தங்களது பயணத்தை அமைத்து கொண்டனர். வேர்க்கோடிலிருந்து தங்கச்சிமடத்திற்கு 2.15 மணிக்கு பேருந்து பாம்பனுக்கு போனால், திரும்ப தங்கச்சிமடத்திற்கு 2.50 க்கு வந்து சேரும் என்று துல்லியமாக கணக்கிட்டு தங்கச்சிமட பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள்.


பாம்பனிலிருந்து வேர்க்கோடிற்கு  கிட்டத்தட்ட 26 பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி புறப்படும் பேருந்தானது இடையிடையே கைகளை காட்டி மறிக்கும் எல்லோருக்கும் நின்று ஏற்றி செல்லும்.

கதிரவனுக்கு முன்பாக

அதிகாலை 4 மணிக்கு கதிரவனுக்கு முன்பாக தனது அன்றைய பயணத்தை சுறுசுறுப்பாக துவக்கி விடும் எங்கள் டவுன் பஸ். ஏனெனில் அந்த நேரங்களில் தான் எங்கள் மீனவ மக்கள்  தங்கள் தொழில்களுக்காக ஆயத்தமாவர்கள். எல்லா ஊரிலும் அதிகாலை பேருந்து கூட்டமே இல்லாமல் கடமைக்கு பயணிக்கும் ஆனால் எங்கள் ஊரில் நிற்பதற்கு கூட இடமிருக்காது. ஆண்களையும் பெண்களையும்  சரிசமமான எண்ணிக்கையில்  நிரப்பிக் கொண்டு வேர்க்கோட்டை நோக்கி பயணப்படும் எங்கள் நகரப் பேருந்து.

பேருந்திற்கும் எங்களுக்குமான உறவு முறை

இந்த டவுன் பஸ் ஆனது தங்கச்சிமட மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகும். எங்களுக்காக வடிமைக்கப்பட்டு எங்களது தேவைக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது என்பதே அதன் ரகசியம்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக, சென்னையில் வசிப்பவர்களுக்கு தெரியும் பேருந்து நடத்துனர்கள் எவ்வளவு மரியாதையாக(!) நடத்துவார்கள் என்று. அவர்கள் எவ்வளவு வயதானவர்கள் என்றாலும் ஒருமையில் மட்டுமே விளிப்பார்கள் நீ, வா, போ (கேட்டாலே கடுப்புதான் வரும்). ஆனால் எங்கள் டவுன் பஸ் லே நடத்துனரும், ஓட்டுனரும் எங்க சித்தப்பா மக்க, பெரியப்பா மக்க மாதிரி. எங்கள் நடத்துனர் அவரவர் வயது தகுந்த மாதிரி உறவு முறை வைத்து அழைப்பார், வயதானவர்களை தாத்தா, பாட்டி, கொஞ்சம் குறைந்தவர்களை பெரியம்மா, இன்னும் கொஞ்சம் குறைந்தவர்களை அக்கா அவர்களது வயது குறைந்து இருந்தாலும்.

கும்கி படத்துலே வருகிற யானையை விட எங்கள் மக்கள் வாழ்வினுடே இரண்டற கலந்து விட்டது இந்த நகரப் பேருந்து. இன்னும் எத்தனை தொழிநுட்பங்கள் எத்தகைய பேருந்துகளை கொண்டு வந்தாலும் எங்களை விட்டு பிரியாது எங்கள் டவுன் பஸ், நாங்களும் கூட.


No comments: